ஸ்கூட்டரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த ஷேக் உசைன் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டிற்கு அருகில் உள்ள முரளிகுமார் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். ஷேக் உசைன் முரளிகுமார் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஷேக் உசைனை வல்லத்தில் விடுவதற்காக முரளிகுமார் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் மருதகுளம் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த ஸ்கூட்டர் இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியுள்ளது.
இதில் ஷேக் உசைன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். முரளிகுமார் பலத்த காயமடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஷேக் உசைனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முரளிகுமாருக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வல்லம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.