மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுந்தரேசபுரம் பகுதியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காற்றாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 16 நாட்களுக்கு முன்பு விக்னேஷின் தாய் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் விக்னேஷ் கடந்த 15-ந் தேதி தனது தாயாருக்கு திதி கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கயத்தாறு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது இரட்டைகுளம் பாலத்தின் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த விக்னேஷை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.