மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள சேரிப்பாளையம் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேங்காய் உரிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அருண்குமார் மோட்டார் சைக்கிளில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் உடுமலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திருமண விழா முடிந்து மோட்டார் சைக்கிளில் சேரிப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது உடுமலை-பெதப்பம்பட்டி சாலையில் வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் அருண்குமார் தூக்கி வீசப்பட்டு பக்கத்து தோட்டத்தில் போடப்பட்டிருந்த கம்பி வேலியில் உள்ள தூணில் தலை பலமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அருண்குமாரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அருண்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.