வரும் காலங்களில் பயணிகளுக்காக கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே போக்குவரத்து துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
மேலும், ரயில் நிலையங்களில் பார்சல் முறையில் கடைகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கோயல் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த இரண்டரை மணி நேரத்தில் 4 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் வழக்கத்தில் உள்ள கால அட்டவணைப்படி குளிர்சாதனம் அல்லாத ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார்.
அதன்படி ஏசி வசதி இல்லாத, தேர்வு செய்யப்பட்ட 200 ரயில்களை நாடு முழுவதும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் தொடங்கும் இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்று ரயில்வே அறிவித்து இருந்தது.
அதில் கடந்த இரண்டரை மணி நேரத்தில் மட்டும் சுமார் 4 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், சுமார் 1.7 லட்சம் பொது சேவை மையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்கும் என்று ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 2 அல்லது 3 நாட்களில் டிக்கெட் கவுன்டர்களிலும் முன்பதிவு தொடங்கும் எனவும் கூறியுள்ளார்.