தனது மகளை ஆசை வார்த்தைகள் கூறி யாரோ கடத்தி சென்று விட்டதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் 15 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது பெற்றோர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்ற காரணத்தால், இந்த மாணவியும், அவரது அக்காவும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இந்நிலையில் இரவு வீட்டிற்கு பெற்றோர் திரும்பி வந்தபோது, தனது இளைய மகளை வீட்டில் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மூத்த மகளிடம் இது குறித்து வினவியபோது, வெளியே சென்ற தங்கை வீட்டிற்கு திரும்பி வரவில்லை என்று தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து அவரது பெற்றோர் அந்த மாணவி அனைத்து இடங்களிலும் தேடி உள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்காத காரணத்தால் மாணவியின் தந்தை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்தார். அந்த புகாரில் ஆசை வார்த்தைகள் கூறி தனது மகளை யாரோ கடத்தி சென்று விட்டதாகவும், அவரை விரைவில் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை கடத்திச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.