பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கானை பயன்படுத்தக்கூடாது என்று இரு நாடுகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானை பயங்கரவாதிகளின் புகலிடமாக பயன்படுத்தக்கூடாது என்று இந்தியாவும் அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளன. அதாவது பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை இருதரப்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை கடந்த 26, 27 ஆம் தேதிகளில் அமெரிக்கா தலைநகரான வாஷிங்டனில் வைத்து நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாடுகளும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் “பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் இருதரப்பு நாடுகளின் ஒத்துழைப்பும் இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. இதனை தவிர்த்து சட்ட அமலாக்கம், தகவல் பரிமாற்றம், பயங்கரவாதத்தை சமாளிப்பதற்காக தேவைப்படும் புதிய வழிமுறைகளை பரிமாறிக் கொள்வது போன்றவற்றில் தங்களது பங்களிப்பை மேலும் அதிகரிப்போம் என்று இந்தியாவும் அமெரிக்காவும் உறுதி அளித்துள்ளன.
மேலும் ஆப்கானிஸ்தானில் புதிதாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலீபான்கள் அந்நாட்டை பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடமாக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் எதிரிகள் நாடு மீது போர் தொடுப்பதையும் வன்மையாக கண்டிக்கிறோம். குறிப்பாக கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் முதலில் நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.