Categories
உலக செய்திகள்

பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கிய நாடு…. தொடரும் வன்முறைச் சம்பவங்கள்…. ஆபத்தில் இருக்கும் பொதுமக்கள்….!!

ஆப்கானில் ஆட்சி அமைக்கும் தலீபான்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் பெரும் சவாலாக இருப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் செல்கின்றனர். மேலும் அங்குள்ள ஆப்கானியர்கள் அவர்களின் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளனர். இந்த நிலையில் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஒரு பிரிவினரான கோரசான் அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 13 அமெரிக்கா வீரர்கள் உட்பட மொத்தம் 175 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்து வெள்ளை மாளிகையில் உரையாற்றினார்.

அதில் அவர் கூறியதாவது ” இந்த தாக்குதலை நடத்தியவர்கள் எவராக இருப்பினும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம்” என்று தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ஆப்கானில் உள்ள நங்ஹகர் மாகாணத்தில் இருக்கும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் பிரிவைச் சேர்ந்த கோரசான் அமைப்பினரை குறிவைத்து  அமெரிக்கா படையினர் வான்வெளி தாக்குதல் நடத்தினர். இதில் முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அமெரிக்கா செய்தி தொடர்பாளரான கேப்டன் பில் அர்பன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது ” விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரிவினரான கோரசான் அமைப்பினரை வான்வெளி தாக்குதல் நடத்தி கொன்றுவிட்டோம். அதில் பயங்கரவாதிகளை அழித்து இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளோம்.

மேலும் பொதுமக்களுக்கு எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை” என்று கூறியுள்ளார். இதனையடுத்து யார் இந்த கோரசான் பயங்கரவாதிகள் என்னும் கேள்வி எழுந்தது. அதற்கு பதிலாக கூறப்பட்டதில் “இவர்கள் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் தாக்குதல்களை நடத்துபவர்கள். அதிலும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கிளையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ‘இஸ்லாமிக் ஸ்டேட் கோரசான் பிராவின்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றனர். மேலும் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் சொர்க்க நகரமாக இருக்கிறது. அதில் மிக மிக மோசமான பணிகளை செய்து வருபவர்கள் இந்த கோரசான் அமைப்பினர். இவர்கள் ஆப்கானிலும் பாகிஸ்தானிலும் 100க்கும் அதிகமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். குறிப்பாக ஈராக்கிலும் சிரியாவிலும் 2015-ல் கொடிகட்டிப் பறந்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஒரு பகுதியாக கோரசான் பிரிவினர் உருவானார்கள்.

அதிலும் தங்கள் அமைப்பு சரியில்லை இன்னும் பயங்கரவாதம் வேண்டும் என்று நினைக்கும் தலீபான்கள் பலரும் இந்த கோரசான் பிரிவில் இணைந்து விடுவார்கள். இதில் இருப்பவர்கள் முக்கால்வாசி பேர் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஆவர். சமீபகாலமாக நடந்து வரும் நாச வேலைகள் அனைத்தையும் செய்பவர்கள் இவர்களே. சான்றாக மகளிர் பள்ளிகள், மருத்துவமனைகளில் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் கர்ப்பிணிப் பெண்களையும் செவிலியர்களையும் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்றுள்ளனர். இவர்களுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நங்ஹகர் மாகாணம் தான் தலைநகரமாகும். தொடக்கத்தில் கோரசான் அமைப்பில்  3000 பேர்  இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் படைகளின் அதிரடி நடவடிக்கையால் இவர்கள் பெரும் வீழ்ச்சியை சந்தித்ததாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த 15 ஆம் தேதி முதல் தலீபான்களின் அதிகாரத்தின் கீழ் சென்றது. இதனால் தலீபான்கள் சிறையிலிருந்த ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா பயங்கரவாதிகளை விடுதலை செய்தனர். மேலும் அவர்கள் இப்போது எங்கு தலைமறைவாக உள்ளனர். குறிப்பாக என்ன சதி வேலையை செய்ய காத்து இருக்கிறார்களோ என்பது குறித்து  தெரியவில்லை. ஆனால் தலீபான்களுக்கும் ஐ.எஸ் பிரிவினருக்கும் வித்தியாசம் உள்ளது. அதாவது, இவர்கள் இருவரும் பயங்கரவாத அமைப்பினர் என்றாலும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்கின்றனர். ஏனெனில் தலீபான்கள் புனிதப் போரை கைவிட்டு விட்டதாக ஐ. எஸ் அமைப்பினர் அவர்களின் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த தலீபான்களின் அமைப்பில் திருப்தி அடையாதவர்கள் கோரசான் பிரிவில் இணைந்து விடுகின்றனர். அதிலும் எதிர்காலத்தில் தலீபான்கள் அமைக்கப்போகும் புதிய ஆட்சிக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் பெரும் சவாலாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பிரிவினரை அனுமதிக்க மாட்டோம் என்று கூறினர். ஆனால் அதற்கு நீங்கள் யார் என்று கேள்வி கேட்பது போல காபூல் விமான நிலையத்தை ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் முக்கியமாக பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். அங்கு யுத்தங்கள் முடிவில்லா தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக அடுத்த யுத்தம் தலீபான்கள் மற்றும் ஐ.எஸ் பிரிவினருக்கும் இடையேதான் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |