ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பீர்களா என்று கேட்டதற்கு பாகிஸ்தான் தூதர் விளக்கமளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்களினால் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து அவர்கள் கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி அன்று பதவி ஏற்பு விழாவை வைத்திருந்தனர். ஆனால் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் நெருக்கடி காரணமாக அது நிறுத்தப்பட்டது. மேலும் பதவியேற்பு விழா இல்லாமலேயே ஆட்சியை தலீபான்கள் கையிலெடுத்தனர். இந்த நிலையில் பாகிஸ்தானிடம் ஆப்கானுக்கு எந்தவிதமான ஆதரவு தெரிவிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் அசத் மஜீத் கான் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் “தலீபான்கள் மனித உரிமைகளை மதித்து நடப்போம் என்று உலக நாடுகளுக்கு வாக்கு அளித்துள்ளனர். முதலில் அவர்கள் அதனை காப்பாற்ற வேண்டும்.
மேலும் மனித அடிப்படை உரிமைகளை காக்க வேண்டும். குறிப்பாக பெண்களின் உரிமையை போற்றி பேண வேண்டும். இது போன்ற செயல்களை தான் நாங்களும் விரும்புகிறோம். தற்போதைய ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்காக ஆப்கானிஸ்தானுடன் சர்வதேச சமூகம் இணைந்து செயல்பட வேண்டும். அதற்கு பிறகு ஆதரவளிப்பது அல்ல புறக்கணிப்பது குறித்து யோசனை செய்யலாம் “என்று கூறியுள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானில் நிலவும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. அதையே தான் நாங்களும் விரும்புவதாகவும் அசத் மஜீத் கான் தெரிவித்துள்ளார்.