Categories
உலக செய்திகள்

இன்று முதல் தொடக்கம்…. ஆப்கானில் விமான சேவைகள்…. 200 பேர் பயணம்….!!

கத்தார் அரசின் உதவியுடன் ஆப்கானில் மீண்டும் சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து கடந்த மாதம் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதனையடுத்து அந்நாட்டு அதிபரான அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து தலீபான்கள்  புதிய ஆட்சி அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தலீபான்கள் அமைப்பின்  தற்போதைய தலைவரான முல்லா அப்துல் கனி பரதர் அதிபராக பதவியேற்பார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் காபூல் விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அமெரிக்கா ராணுவம் முழுவதும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி இரவு அன்று அவர்களின் சொந்த நாட்டிற்கு திரும்பினர்.

இதனையடுத்து தலீபான்கள் விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதன் பின்னர் கத்தார் அரசின் உதவியோடு விமான போக்குவரத்தை தொடங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தலைநகர் காபூலில் இருந்து கத்தாருக்கு  முதல் சர்வதேச விமானமானது இன்று கிளம்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விமானத்தில் அமெரிக்கர்கள் உட்பட மொத்தம் 200 பேர் பயணம் செய்துள்ளனர். குறிப்பாக சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில் வரும் நாட்களில் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு மக்களை  உலக நாடுகள் மீட்கும் என கூறப்படுகிறது.

Categories

Tech |