மொடக்குறிச்சியைச் சேர்ந்த இளைஞர் உடும்பைப் பிடித்து அதனை கொன்ற குற்றத்திற்காக வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்ட வனத் துறையினர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையம் சாலைப்பகுதியில் வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அப்போது அந்த வழியாக வெள்ளை சாக்குடன் வந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப்பின் முரணான பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அவர் கொண்டுவந்த சாக்கைப் பரிசோதனை செய்தனர்..
அப்போது சாக்கின் உள்ளே உயிரற்ற நிலையில் உடும்பு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதனைத் தொடர்ந்து வனத் துறையினர் அவர்களது உயர் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களது உத்தரவின்பேரில் காட்டு விலங்கைப் பிடித்த குற்றத்திற்காக வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகிலுள்ள அனுமன்பள்ளி அஞ்சுராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கொழந்தசாமி என்ற இளைஞரை கைதுசெய்தனர்.
பின்னர் அரியவகை உயிரினத்தைப் பிடித்து அதன் உயிரை எடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட கொழந்தசாமி பெருந்துறை குற்றவியல் நடுவர் முன் முன்னிலைப்படுத்தப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.