அமெரிக்காவின் பத்திரிகையாளர்களுக்கான உயரிய விருது தமிழக வம்சாவளியான லண்டன் பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் உலகில் ஊடகத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வருடம்தோறும் 21 பிரிவுகளில் விருது வழங்கி கௌரவபடுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று 105-ஆவது ஆண்டிற்கான புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் சர்வதேச செய்தியாளருக்கான புலிட்சர் விருதை லண்டனில் வசிக்கும் தமிழக வம்சாவளியான மேகா ராஜகோபாலன் என்பவர் பெற்றுள்ளார். அவர் சர்வதேச நிருபராக புஸ்ஸ்ஃபீட் நியூஸ் ( BuzzFeed News ) எனும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சீனாவில் உள்ள தடுப்பு முகாம்களில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த உய்குர் முஸ்லிம்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட்டிருப்பதினை பாராட்டி அவருக்கு இந்த புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேகா ராஜகோபாலன் “எங்களுக்கு ஆதரவளித்த அலெஸ் காம்ப்பெல் ( Alex Campbell ), புஸ்ஸ்ஃபீட் நியூஸ் ( BuzzFeed News ), எங்களுடைய அணி மற்றும் பிற நிறுவனங்களுக்கும் நன்றி கடன்பட்டுள்ளேன் என்றும், உண்மையாக சின்ஜியாங்கின் முகாம்களுக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்த விஷயத்தை தங்களிடம் கூறிய முன்னாள் கைதிகளுக்கு தான் நன்றி கடன்பட்டிருப்பதாகவும், அவர்களுடைய அந்த துணிச்சலுக்கு அந்நாட்டு மக்கள் கடன்பட்டுள்ளதாகவும், இன்னும் இது போன்ற பல வேலைகள் செய்ய உள்ளதாகவும்” தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.