ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் கிடைக்காததால் 2 குழந்தைகளுக்கு தாயான பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள குற்றக்கரை பகுதியை சேர்ந்த ராஜகுமாரன் என்பவரின் மனைவி பத்மஷீலா.. இவருக்கு வயது 31 ஆகிறது.. 2 குழந்தைகளுக்கு தாயான பத்மஷீலா தபால் மூலம் பிஎச்.டி. படித்து வந்தார்.. பத்மஷீலா கடந்த 2 மாதங்களாக வெள்ளிச் சந்தை அருகே பெருஞ்செல்வவிளையிலுள்ள தன்னுடைய தாய் வீட்டில் தான் தங்கியிருந்தார்.
இந்நிலையில், ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம் படிப்பதற்காக செல்போன் வாங்கி தருமாறு தனது கணவரிடம் கேட்டிருக்கிறார் பத்மஷீலா.. ஆனால் கணவர் வாங்கி கொடுக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனால், பத்மஷீலா மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த சூழலில், நேற்று மாலையில் மாடியிலுள்ள அறைக்கு சென்ற பத்மஷீலா நீண்டநேரமாகியும் கீழே இறங்கி வரவே இல்லை. இதையடுத்து பெற்றோர் அவரை தேடி மாடிக்கு சென்று அறையை திறந்து பார்த்த போது தான் அதிர்ச்சி காத்திருந்தது.. அதாவது, பத்மஷீலா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து சடலமாக தொங்கினார்..
இதுகுறித்து வெள்ளிச்சந்தை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கித்தராததால் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.