Categories
உலக செய்திகள்

ஷார்ஜாவில் ஆஸ்பத்திரி வாசலில் பிரசவம்… நான் எதிர்பார்க்கவில்லை… குழந்தை பெற்ற சென்னை பெண் உருக்கம்..!!

சென்னையை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஷார்ஜா மருத்துவமனை வாசலில் குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூரை சேர்ந்தவர்கள் ஜாஹிர் அசாருதீன்-பர்வீன் பானு தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஏழு வயதில் தஸ்சீன் என்ற மகள் உள்ளார். இக்குடும்பம் ஷார்ஜாவில் வசித்து வருகின்றது. ஜாஹிர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் நிலையில் அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியான பர்வீன் பானுவுக்கு அஜ்மானில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் வரும் 16ஆம் தேதி பிரசவத்திற்கான தேதி குறிக்கப்பட்டது. ஆனால் பர்வீன் பானுவுக்கு அதற்கு முன்பாகவே கடந்த 4 ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜாகிர் உடனடியாக தனது மனைவியை காரில் அருகில் இருக்கும் மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்து சென்றார். போக்குவரத்து நெரிசலில் மருத்துவமனை செல்ல தாமதமாகி காரிலேயே குழந்தை பிறக்க தொடங்கியது. ஜாஹிர் தனியார் மருத்துவமனைக்கு அளித்த தகவலின் அடிப்படையில் மருத்துவர் நுழைவுவாயிலில் காத்திருந்தார். பின்னர் கார் வந்ததும் வாசலில் வைத்தே பெண்ணிற்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.

இதில் அந்தப் பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அதோடு குழந்தை பிறந்து வெகு நேரம் வெளியிலேயே இருந்ததால் கிருமித்தொற்று ஏற்பட்டு விடாமல் இருக்க தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் குழந்தை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழந்தையின் தாயான பர்வீன் பானு கூறுகையில் “இவ்வாறு நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கடவுள் என்னைக் காப்பாற்றினார் என்று தான் நிச்சயம் கூறவேண்டும்.

வீட்டில் இருக்கும் போது வலி ஏற்பட்டு காரில் வரும் போதே குழந்தை வெளியில் வருவதை என்னால் உணர முடிந்தது. மருத்துவமனையை வந்தடையும் போது எனக்கு குழந்தை பிறந்து விட்டது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றேன். எப்போதும் இத்தகைய சம்பவத்தை என்னால் மறக்க இயலாது. என் குழந்தைக்கும் எனக்கும் மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் அவர் தலைமையிலான குழுவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். எங்கள் குழந்தைக்கு அப்சீன் பெயர் வைத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |