கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தேர்வு குழு தலைவர் நடவ் லேபிட் வெறுப்புணர்வை தூண்டும் திரைப்படம் என்றும் கொச்சையான திரைப்படம் என்றும் விமர்சித்தார். அதோடு இதுபோன்ற படங்களை இவ்விழாவில் திரையிட்டு காட்டுவது சரி கிடையாது என்றும் கூறினார்.
இது தொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர் கிலோன் நடவ் லேபிட்டுக்கு பகிரங்கமாக கண்டனம் தெரிவித்ததோடு, அவருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, இந்திய நாட்டின் கலாச்சாரத்தில் விருந்தாளிகளை கடவுள் என்று கூறுகிறார்கள்.
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் உங்களை அழைத்து உங்களுக்கு கொடுத்த உபசரிப்பு மற்றும் நம்பிக்கையை நீங்கள் துஷ்பிரயோகம் செய்து விட்டீர்கள். இதற்காக நீங்கள் வெட்கப்பட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த கருத்துக்களை ஒருபோதும் ஏற்க முடியாது. இங்குள்ள காஷ்மீர் பிரச்சனையின் உணர்வுகளை தான் அப்படம் காட்டுகிறது.
படத்தின் மீதும், இஸ்ரேலிய அரசியலிலும் உங்களுக்கு இருக்கும் அதிருப்தியை இது தெளிவாக காட்டுகிறது என்று கூறியுள்ளார். மேலும் இந்தியா மற்றும் இஸ்ரேல் நாட்டின் உறவுகள் வலுவானவை என்றும் இது போன்ற பிரச்சினைகளில் இருந்து கண்டிப்பாக மீண்டு வரும் என்றும் இஸ்ரேலிய தூதர் ட்வீட் செய்துள்ளார்.