போலீஸ் ஏட்டு வலியால் துடித்த கர்ப்பிணிக்கு உதவிய சம்பவம் வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு முழு உரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் அனைத்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு தேவை இன்றி யாரும் வெளியில் சுற்றக் கூடாது என அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகூரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரை பிரசவத்திற்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரது உறவினர்கள் ஆட்டோ அல்லது வேறு ஏதேனும் வாகனம் வருமா என சாலையில் வெகுநேரமாக காத்திருந்தனர். ஆனால் ஊரடங்கு காரணமாக வாகனங்கள் ஒன்றும் செல்லவில்லை.
இதனால் கர்ப்பிணியை அவரது உறவினர்கள் இரண்டு பேர் கைத்தாங்கலாக பிடித்து நாகை அரசு மருத்துவமனைக்கு நடத்திய கூட்டிவர முற்பட்டுள்ளனர். அந்த சமயத்தில் நாகை ஏழைப் பிள்ளையார் கோவில் சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீஸ் ஏட்டு ஒருவர் இதனை பார்த்ததும் உடனடியாக ஆட்டோவை வரவழைத்து அதில் கர்ப்பிணி பெண்ணை ஏற்றி தன்னிடம் இருந்த பணத்தை ஆட்டோ ஓட்டுனருக்கு கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. மேலும் கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய போலீசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.