திருத்தணி அருகே கர்ப்பிணி இளம்பெண் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள நல்லாட்டூர் என்ற காலனியில் வசித்துவந்த மணிமேகலை(24) என்பவர் அப்பகுதியில் இருக்கின்ற ஆற்றங்கரையோரம் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்தப் பகுதியில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராஜ்குமார் என்பவரை மணிமேகலை காதலித்து வந்ததாகவும் அதனால் அவர் கர்ப்பம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் மணிமேகலையை ராஜ்குமார் திருமணம் செய்துகொள்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.. அதுமட்டுமன்றி மணிமேகலையை காவல் உதவி ஆய்வாளர் சுதாகர் உதவியுடன் அடித்து விரட்டியதாக கூறப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து மணிமேகலை ஆற்றங்கரையில் எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இந்தச் சம்பவம் நடந்து 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றி அவரின் மரணத்திற்கு காரணமாக இருந்த காதலன் அவரின் பெற்றோர் மற்றும் இவர்களுக்கு ஆதரவாக இருந்த கனகம்மாசத்திரம் காவல் உதவி ஆய்வாளர் சுதாகர் ஆகியோர் அனைவரின் மீதும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் தலித் அமைப்புகள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.