கிராமவாசிகளின் எதிர்ப்பால் முதியவர் ஒருவர் தனது மனைவியின் உடலுடன் சாலையில் அலைந்து திரிந்த சம்பவம் வேதனையை அளித்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஜான்பூர் பகுதியில் திலக்தாரி என்பவரும் இவருடைய மனைவி ராஜ்குமாரி என்பவரும் வசித்து வந்தனர். ராஜ்குமாரிக்கு நீண்ட காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. அவருக்கு கடந்த திங்கட்கிழமை திடீரென்று உடல்நிலை மோசமானதால் அவருடைய கணவர் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அதன்பின் மருத்துவமனை நிர்வாகம் ராஜகுமாரியின் உடலை ஆம்புலன்சில் வைத்து திருப்பி அனுப்பியுள்ளது. ஆனால் திலக்தாரி வசிக்கும் கிராமத்தில் உள்ள கிராமவாசிகள் ராஜ்குமாரின் உடலை ஊருக்குள் எடுத்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து இன்னும் தெரியவரவில்லை. ஆனால் தங்களுக்கு கொரோனா பரவி விடுமோ என்ற அச்சத்தில் கிராமவாசிகள் இவ்வாறு செய்துள்ளனர்.
இதனால் திலக்தாரி மனைவியின் உடலை சைக்கிளில் வைத்து அங்குமிங்குமாக அலைந்து திரிந்துள்ளார். ஆனால் எங்குமே ராஜ்குமாரியின் உடலை தகனம் செய்வதற்கு இடமளிக்கவில்லை. அவர் இறுதியில் சோர்வடைந்த சாலையில் தனது மனைவியின் உடலை போட்டுவிட்டு அதன் அருகிலேயே அமர்ந்துள்ளார். அதன்பின் மறுநாள் காலை இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் முதியவருக்கு உதவி செய்வதற்காக வந்தனர். அவர்கள் ராம்காட் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு ராஜ்குமாரியின் உடலை எடுத்து சென்று இறுதிச் சடங்கை செய்துள்ளனர்.