இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் கோர தாக்குதலுக்கு இரட்டை குழந்தைகளின் தாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இங்கிலாந்து நாட்டில் நியூமார்ஸ்கி என்ற பகுதியில் இருக்கும் தீசைடு என்ற நகரத்தை சேர்ந்தவர் கரோலைன் சான்பை (Caroline Saunby) . 48 வயதான இவருக்கு 6 வயதில் ஜோசப் மற்றும் எலியட் என்ற இரட்டை குழந்தைகள் இருக்கின்றார்கள். இவரது கணவர் பெயர் விக்.கரோலைன் நன்கு ஆரோக்கியமாக இருந்தார். இந்த நிலையில் கடந்த 26ம் தேதி அவருக்கு தொண்டையில் வலி ஏற்பட்டது. அதை அவர் சாதாரணமாக எடுத்துக் கொண்டார்.
பின்னர் ஓரிரு நாட்களில் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு மூச்சுவிட போராடும் நிலைக்கு சென்று விட்டார். இதையடுத்து உடனடியாக அவரை விமான ஆம்புலன்ஸ் மூலம் மிடில் பிரோவில் இருக்கும் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கரோலைனுக்கு சோதனை செய்து பார்த்தபோது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
கொரோனா தோற்று நோய் அறிகுறிகள் தெரிந்த 4 நாட்களில் அவரது உயிர் பிரிந்தது அவருடைய குடும்பத்தினருக்கு மட்டுமில்லாமல் மருத்துவர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இதில் இன்னொரு அதிசயம் என்னவென்றால் இறந்து போன கரோலைனும் அவருடைய சகோதரி சாரா சார்விஸ் என்பவரும் இரட்டையர்கள் ஆவார்கள். சகோதரியின் மறைவு சாராவுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது.
சகோதரி பற்றி சாரா உருக்கத்துடன் கூறியதாவது, தனது சகோதரி மிகவும் அன்பானவள். குழந்தைகளிடமும் கணவரிடமும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். யாரிடமும் கடிந்து பேச மாட்டாள். அவளுக்கு எந்த நோயும் இல்லை. ஆனால் 4 நாட்களில் எங்களை விட்டு பிரிந்து விட்டாள் என்று மிகுந்த வருத்தத்துடன் கூறினார்.
மேலும் வயது முதிர்ந்தவர்களுக்கு தான் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்பது கிடையாது. அனைவரும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றார். அவருடைய சகோதரியின் மருத்துவ செலவுக்கு உதவி செய்ய கோரி இருந்தார்கள். அதன்படி பல்வேறு தரப்பிலிருந்து 13 லட்சம் வரை உதவி கிடைத்தது.
இதேபோல இங்கிலாந்தில் போல்டன் என்ற இடத்தில் 66 வயது பெண்ணான லிண்டாதுப்பென் என்பவர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தார். சமூக சேவகியான அவருடைய 28 வயது ரோப் என்ற மகனுக்கு கொரோனா தொற்று இருந்தது. மகனை அவர் கவனித்து வந்தார். மகனுக்கு குணமாகி விட்டது. ஆனால் அவர் இறந்துவிட்டார். தற்போது அவருடைய 23 வயதான இளைய மகனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.