கோவிலில் திருமணம் செய்த பின் காதல் ஜோடி பவானி காவல் நிலையத்தில் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு தஞ்சமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள சேர்வராயன்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன்.. இவருடைய மகன் ஸ்ரீதர்.. 24 வயதுடைய இவர் லேத் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதேபோல திப்பிசெட்டிபாளையத்தில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாசன். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மகள் உள்ளார். 19 வயதுடைய இவர் கோபியிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. 2ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் ஸ்ரீதரும், பிரியதர்ஷினியும் ஒரே பேருந்தில் பயணம் செய்யும்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாட்கள் செல்ல செல்ல காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இந்த சூழலில் திடீரென இருவரும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி, பின்னர் அம்மாபேட்டையில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் மாலை மாற்றி நண்பர்கள் முன்னிலையில் கல்யாணம் செய்து கொண்டனர்.
இதனிடையே அதிர்ச்சியடைந்த பிரியதர்ஷினியின் தந்தை பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ‘வீட்டை விட்டு வெளியே சென்ற தன்னுடைய மகளை காணவில்லை’ என்று புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஸ்ரீதர் – பிரியதர்ஷினி இருவரும் பாதுகாப்பு கேட்டு நேற்று பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
அதனைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி 2 பேரின் பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில், பிரியதர்ஷினியின் பெற்றோர் இவர்களது காதல் கல்யாணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.. ஆனால் ஸ்ரீதரின் பெற்றோர் இதனை ஒப்புக்கொண்டனர். அதைத் தொடர்ந்து இருவரும் அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.