ஆம்பூர் அருகே காட்டுப் பகுதியில் அனுமதியின்றி மிருகங்களை வேட்டையாடச் சென்ற சிறுவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஒடுகத்தூர் ராசிமலைப் பகுதியில் மேல் அரசம்பட்டு, பங்களாமேடு, முள்வேலிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனுமதியின்றி மிருகங்களை வேட்டையாடச் சென்றனர். 16 வயதுடைய சிறுவர்கள் ஐந்து பேர் உட்பட 7 பேர் கொண்ட கும்பல் நேற்று ஒடுகத்தூர் காப்புக்காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளது.
அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், மேல்அரசம்பட்டு பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் துளசிவேந்தனை, முள்வேலி மலைப் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், நாட்டுத் துப்பாக்கியால் தலையில் சுட்டார். இதில் துளசிவேந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து துளசிவேந்தனின் சித்தப்பா திருக்குமரன்(45) அளித்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். துளசிவேந்தனின் உடலை ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட சந்திரசேகருடன் மனோகர் என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய நான்குபேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.