தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களும், இளைஞர்களும் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. இது தொடர்பான உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும் மாணவர்கள் அதை காதில் வாங்கிக் கொள்வது போல் தெரியவில்லை. படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகம் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்தாலும் கூட படியில் தொங்குவது தான் கெத்து, ஸ்டைல் என்று மாணவர்கள் நினைக்கிறார்கள். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய வழித்தடங்களில் காட்பாடி மற்றும் பாகாயம் பேருந்துகள் நூற்றுக்கணக்கான அளவில் இயங்கி வருகிறது.
இந்த பேருந்துகளில் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இதனால் பெரும்பாலான மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டே செல்வார்கள். கூட்ட நேரத்தில் மட்டும் தான் படிக்கட்டுகளில் பயணம் செய்கிறார்கள் என்று பார்த்தால் கூட்டம் இல்லாத நேரத்தில் கூட மாணவர்கள் அப்படித்தான் செய்கிறார்கள். இந்த மாணவர்களை போக்குவரத்து காவல்துறையினர், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள், பயணிகள் என பலரும் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும் மாணவர்கள் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து படிக் கட்டுகளில் செல்வதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வுகள் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட போதிலும் பெரிய அளவில் பலன் அளிக்காததாக தான் கூறப்படுகிறது. மேலும் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்க நிரந்தர தீர்வை காண வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.