சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 22,993ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,000 பேர் குணமடைந்துள்ள நிலையில் 212 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது, ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,000ஐ நெருங்குகிறது. இதனால் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு 5 அமைச்சர்கள் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், அன்பழகன், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாண்டியராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் குழு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அம்மா மாளிகையில் மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்.