சிவகாசியில் பட்டாசு மூலப்பொருட்களை அரைக்கும் கிரைண்டிங் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த விஜயகண்ணன் என்பவர் சொந்தமாக கெமிக்கல் கிரைண்டிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இத்தொழிற்சாலையில் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் அரைக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது பணி முடிந்து வீடு சென்றவுடன் வெடி உப்பில் திடீர் உராய்வு ஏற்பட்டதன் காரணமாக பயங்கரமாக தீ விபத்து ஏற்பட்டு கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இதையடுத்து தகவல் கொடுக்கப்பட்ட பின் சிவகாசி, விருதுநகர், வெம்பக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.