Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து : கிரேன் ஆபரேட்டர் மீது வழக்குப்பதிவு!

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இந்த பட ஷூட்டிங் சென்னை  பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் பிப்.,7ஆம் தேதி முதல் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இவிபி பிலிம் சிட்டியில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் செட் அமைக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக, ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன் அறுந்து விழுந்தது. பல அடி உயரத்தில் இருந்து விழுந்த கிரேனில் சிக்கி, செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா,மது மற்றும் சந்திரன் ஆகியோர் இந்த விபத்தில் பலியாகி உள்ளனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்திற்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல் ஹாசன்  ட்விட்டரில் உருக்கமாக இரங்கல் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் காவல்துறையினர் கிரேன் ஆபரேட்டர் ராஜன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை ஏற்படுத்துதல், உபகரணங்களை தவறாக கையாண்டு மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரேன் ஆபரேட்டர் ராஜன் தலைமறைவாகியிருப்பதாகவும், அவரை தேடி வருவதாகவும் போலீசார்தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |