கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு என்ற பகுதியில் தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி என்ற நிறைமாத கர்ப்பிணி பெண் வசித்து வந்துள்ளார். இந்த பெண்மணிக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக கஸ்தூரியின் கணவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார். அந்த சமயத்தில் கஸ்தூரி கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு இரட்டை ஆண் குழந்தை வயிற்றில் இருந்துள்ளது.
தன்னுடைய கணவர் இல்லாததால் வயிற்றில் இரட்டை குழந்தைகளை வைத்துவிட்டு கூலி வேலைக்கு சென்று மகளையும் காப்பாற்றி வைத்துள்ளார் கஸ்தூரி. இந்நிலையில் திடீரென கஸ்தூரிக்கு பிரசவ வலி ஏற்படவே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது ஆதார் அட்டை உட்பட ஆவணங்கள் இல்லாததால் மருத்துவர் உஷா சிகிச்சை அளிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதோடு வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு கஸ்தூரியிடம் கூறவே ஆம்புலன்ஸில் செல்வதற்கு பணம் இல்லாததால் வேறு வழியின்றி கஸ்தூரி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் வைத்தே கஸ்தூரிக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் 2 குழந்தைகளும் உயிரிழந்த நிலையில், இரத்தப்போக்கு அதிகரித்ததால் கஸ்தூரியும் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கர்நாடக சுகாதார மந்திரி கே. சுதாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது, ஒரு கர்ப்பிணி பெண் மற்றும் உலகத்தை பார்க்காத இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் வேதனையாக இருக்கிறது. இந்த மனித நேயமற்ற செயலில் ஈடுபட்ட மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்களுக்கு 24 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சை என்று வருபவர்களிடம் ஆவணங்களை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பான சட்ட திருத்தம் தேவைப்பட்டால் அமைச்சரவையில் கொண்டு வரப்படும். அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் வழங்கப்படுவதற்கு மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் அதற்கான முழு செலவையும் அரசே ஏற்கும்.
இது போன்ற மனிதத்தன்மையற்ற செயல்களில் ஈடுபடும் மருத்துவர்களை தண்டிப்பதற்கு புதிய சட்டம் இயற்றப்படும். மேலும் தாய் மற்றும் தந்தையை இழந்து தனித்துவிடப்பட்ட 6 வயது சிறுமியின் பெயரில் லட்5ச ரூபாய் நிலையான வைப்பு தொகை வைக்கப்படுவதுடன், அரசு காப்பகத்தில் சிறுமியை சேர்த்து 18 வயது வரை இலவச கல்வி கொடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.