Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

6 ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி… தாய் கண்முன்னே நேர்ந்த சோகம்..!!

பாலாற்றில் தனது தாயுடன் கால்நடைகளைக் கழுவிக்கொண்டிருந்த 6ஆம் வகுப்பு மாணவன் தாய் கண்முன்னே நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள வடகரை பாலாற்று பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவரும் மணல் கொள்ளையால் சுமார் 10 அடியிலிருந்து 20 அடி மேல் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கடந்த ஒருவார காலமாக ஆம்பூர் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் பள்ளங்களில் மழைநீர் நிரம்பியுள்ளன.

இதனை அறியாமல் வடகரை பகுதியைச் சேர்ந்த கலைவாணி மற்றும் அவரது மகனான 6ஆம் வகுப்பு படிக்கும் மோகன்ராஜ் ஆகியோர் அப்பகுதிக்குச் சென்று தங்களுக்குச் சொந்தமான கால்நடைகளைத் தண்ணீரில் கழுவிக்கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக மாணவன் மோகன்ராஜ் கால் தவறி தண்ணீரில் விழுந்தார். தனது மகன் நீரில் மூழ்கியதை அறிந்த தாய் கலைவாணி கூச்சலிட்டு கதறி அழுதார்.

Image result for நீரில் மூழ்கி பலி

இதைக் கண்ட அப்பகுதியில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் விரைந்துவந்து மாணவன் மோகன்ராஜை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின், சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி மாணவன் மோகன்ராஜை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டுசென்று பரிசோதனை செய்தனர்.

Related image

அப்போது, மோகன்ராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தது. தகவல் அறிந்து விரைந்துவந்த, உமராபாத் காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக பிணக்கிடங்கிற்கு அனுப்பினர். மேலும், இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Categories

Tech |