அமெரிக்காவில் நள்ளிரவில் வீட்டில் பற்றிய தீயிலிருந்து தனது குடும்பத்தை 5 வயது சிறுவன் காப்பாற்றி சம்பவம் அனைவரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆம், நள்ளிரவில் ஒரு குடும்பம் நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் வீட்டின் ஒரு பகுதியில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. அனைவருமே கண்மூடி அயர்ந்து தூங்கி கொண்டிருந்தாலும், அதில் 5 வயது சிறுவன் நோவா மட்டும் திடீரென விழித்து தீ பற்றி எரிவதை பார்த்துவிட்டான். பார்த்த சிறுவன் துளியும் பயப்படவில்லை. உடனே முடிவு எடுத்தான்.. ஆம், தாமதிக்கமால் மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு தன்னுடன் தூங்கிக் கொண்டிருந்த தனது 2 வயது தங்கையை அருகில் இருந்த ஜன்னல் வழியாக இறக்கி காப்பாற்றிவிட்டான்.
சரி அடுத்து அந்த சிறுவன் என்ன செய்தான் என்றால், உடனே பயப்படாமல் தனது வளர்ப்பு நாயின் உதவியுடன் பக்கத்துக்கு அறையில் நன்றாக தூங்கி கொண்டிருந்த தனது அப்பா மற்றும் உறவினர்களையும் எழுப்பி காப்பாற்றினான். இதையடுத்து குடும்பத்தினர் சிறுவனை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து விட்டனர். பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்க, அவர்கள் வந்து தீயை அணைத்தனர். உண்மையில் சிறுவன் தனது குடும்பத்தின் உயிரை காப்பாற்றி மெய் சிலிர்க்கவைத்துள்ளான். சிறுவன்செய்த தைரியத்தையும், சாதூர்யத்தையும் அந்த பகுதி மக்கள் பாராட்டு மழையில் நனைத்து வருகின்றனர்.
மேலும் அச்சிறுவனின் தந்தை மற்றும் உறவினர்கள் நோவாவை தங்களது குடும்பத்தின் ‘ஹீரோ’ எனவும், தங்களை மட்டும் எழுப்பாமல் இருந்திருந்தால் தாங்கள் உயிர் பிழைத்திருக்க மாட்டோம் என உருக்கத்துடன் தெரிவித்தனர். தீ பற்றினால் பெரியவர்களுக்கே என்ன செய்யலாம் ஏது செய்யலாம் என்ற பதட்டம் ஏற்படும். ஆனால் அந்த சிறுவன் புத்தி சாதூர்யமாக செயல்பட்டு பொறுமையாக கையாண்டுள்ளான். ஆம், எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி முதலில் பதட்டப்படாமல் கையாள வேண்டும் என்பதற்கு அந்த சிறுவன் சரியான உதாரணம். இந்த ஹீரோ சிறுவனுக்கு நாமும் வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.