சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களுக்கு அழுத்தம் தரக்கூடாது என சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தோற்று இந்தியா முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தற்போது வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,700-ஐ தாண்டி செல்கிறது.
இதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு இறுதி தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. மேலும் தமிழகம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளிமாணவர்கள் ஆல்பாஸ் என அறிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே அடுத்த வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். பொதுவாக, பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு ஏப்ரல்,ஜூன் மாதங்களில் தொடங்குவது வழக்கம்.
இந்த நிலையில், மாணவர்கள் அனைவரும் அடுத்த வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளதால், சில தனியார் பள்ளி நிறுவனங்கள் கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதையடுத்து, தமிழகத்தில் பள்ளிகள் அடுத்த 3 மாதத்திற்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்திலும் அதே உத்தரவு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அம்மாநில முதல்வர், ” பல தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணத்தை டெபாசிட் செய்யுமாறு மாணவர்களின் பெற்றோருக்கு செய்திகளை அனுப்புகின்றன. இதுபோன்ற காலங்களில் கட்டணங்களுக்காக அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பது பொருத்தமானதல்ல. எனவே, சத்தீஸ்கரில் அனைத்து பள்ளிகளும் கொரோனா வைரஸ் லாக் டவுன் போது கட்டணம் வசூலிப்பதை ஒத்திவைக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.