நடிகை இலியானா தனது உறவினர் உயிரிழந்தது குறித்து உருக்கமான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட மொழிகளில் நடித்துவந்தவர் இலியானா. அதை தொடர்ந்து ’கேடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து நடிகர் விஜய்யுடன் ’நண்பன்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
இந்நிலையில் இலியானாவின் மாமா சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “உங்களின் அதிகமான படங்கள், அதிகமான வீடியோக்கள், ஆடியோ குறிப்புகள் இருந்திருக்க வேண்டும். நீங்கள் இறந்துவிட்டீர்கள் என்ற உண்மையை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எனக்கு தெரிந்தவரை நீங்கள் தான் மிக அற்புதமான அழகான மென்மையான நல்ல மனிதர்.
நான் உங்களுடன் அதிக நேரம் இருந்திருக்க விரும்புகிறேன். சொர்க்கம் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அப்படி இருப்பது உண்மை என்றால் கண்டிப்பாக, நீங்கள் அங்கே தான் இருக்க வேண்டும். நீங்கள் எனக்கு மிகவும் பிடித்த மாமா. இது ஒரு கெட்ட கனவாக இருக்கக் கூடாதா” என்று உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/B-Zj3X3AmKh/?utm_source=ig_web_button_share_sheet