காமெடி நடிகர் யோகி பாபு ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 50 அரிசி மூட்டைகள் வழங்கியுள்ளார்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவதன் காரணமாக அடுத்த ஏப்ரல் 14ஆம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு துறைகள் பெரிதும் நஷ்டமடைந்துள்ளன. படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் திரைப்பட தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நடிகர்கள் மற்றும் நடிகர்கள் உதவ முன்வர வேண்டும் என்று, ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி வேண்டு கோள் விடுத்திருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று பிரபல காமெடி நடிகர் யோகி பாபு 25 கிலோ எடையுள்ள, 50 அரிசி மூட்டைகளை ஃபெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளார்.
இவரைத் தவிர முன்னதாக ரஜினி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூர்யா- கார்த்தி உட்பட ஏராளமான கோலிவுட் பிரபலங்கள் நிதியுதவி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.