Categories
தேசிய செய்திகள்

பிரதமர் நிவாரண நிதிக்கு 2 நாள் சம்பளத்தை வழங்கும் எஸ்பிஐ ஊழியர்கள்… ரூ.100 கோடி நிதி உதவி!

பிரதமரின் நிவாரணநிதிக்கு சுமார் ரூ.100 கோடி நிதியை வழங்குவதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், எஸ்பிஐ ஊழியர்கள் 2,56,00 பேர் தங்களது 2 நாள் சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பேசிய எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார், ” எங்கள் அனைத்து ஊழியர்களும் தங்கள் இரண்டு நாள் சம்பளத்தை PM CARES நிதிக்கு வழங்க முன்வந்திருப்பது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு பெருமை அளிப்பதாக கூறினார். இந்த தொற்றுநோயின் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தொடர்ந்து ஆதரவளிப்போம்” என்று கூறியுள்ளார். கடந்த வாரம், எஸ்பிஐ 2019-20 ஆம் ஆண்டிற்கான ஆண்டு லாபத்தில் 0.25 சதவீதத்தை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் என்ற அறக்கட்டளை இந்தியாவில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்டது. இதில் டாடா நிறுவனம் ரூ.1000 கோடி, ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.500 கோடி, பாபா ராமதேவ் ரூ.25 கோடி என வழங்கியுள்ளனர். விளையாட்டு வீரர்களான சச்சின், ரோஹித் சர்மா உள்ளிட்டோரும் பிரதமர் நிவாரண நிதிக்கு நிதி உதவி வழங்கியுள்ளனர்.

Categories

Tech |