கொரோனா தொற்று காரணமாக ஊரடங்க உத்தரவு நடைமுறையில் இருக்கும் நிலையில், கேரள மாநிலத்தில் இருந்து தமிழக எல்லைக்கு உசிலம்பட்டியை சேர்ந்த தொழிலாளர்கள் நடந்தே வந்துள்ளனர். சுமார் 3 நாட்களாக நடைபயணம் மேற்கொண்ட இவர்கள் 134.6 கி.மீ கடந்து வந்து போடிமேட்டு எல்லை சோதனைச் சாவடியை நேற்று வந்தடைந்துள்ளனர். இந்த தொழிலார்கள் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தின் அருகே அமைந்துள்ள தொடுபுழா பகுதியில் அன்னாசிப்பழ பண்ணையில் கூலி தொழிலார்களாக வேலை பார்த்து வந்துள்ளனர்.
தற்பொழுது நாடு முழுவதும் 7வது நாளாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் நாட்டின் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு வாகனங்கள், பேருந்துகள் ஆகியவற்றின் இயக்கம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வேலை பார்த்து வந்த அண்டை மாநில தொழிலாளர்கள் தங்களது பகுதிகளுக்கு திரும்பிய வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக டெல்லி மாநிலத்தில் இருந்து, உத்திரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்ல மக்கள் கூட்டம் அலைமோதி வருவதை பார்க்கமுடிகிறது. இந்த நிலையில் தான், இன்று தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கேரள மாநிலத்தில் இருந்து நடந்தே வந்து தமிழக எல்லையை அடைந்துள்ளனர்.
இது குறித்து பேசிய தொழிலாளர்கள் அருண் மற்றும் தெய்வம், ” நங்கள் எங்கள் சொந்த ஊருக்கு செல்ல கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறோம். ஊரடங்கு உத்தரவு காரணமாக வேறு மாநிலத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முதலாளிகள் உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மாநில முதல்வர் பரிந்துரைத்தார். ஆனால் பல இடங்களில் முதலாளிகள் அவ்வாறு செய்யவில்லை. அதேபோன்று சமூக ஆர்வலர்கள் வழங்கும் உணவு பொட்டலங்கள் கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. மேலும், உணவோ, தண்ணீரோ வாங்குவதற்கு எங்கள் கையில் பணம் கூட இல்லை” என வேதனையுடன் தெரிவித்தனர்.