Categories
தேசிய செய்திகள்

மருத்துவ சேவைக்காக, மூடப்பட்ட கர்நாடக-கேரள எல்லையை திறக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள எம்.பி மனு

கர்நாடக கேரள எல்லையை திறந்துவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள எம்பி சார்பில் கர்நாடக அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் 144 தடை அமல்படுத்தப்பட்டு இன்று 6வது நாளாக நடைமுறையில் இருக்கிறது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தியாவை பொறுத்தவரை கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவின் எல்லை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகியவை முற்றிலும் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல அத்தியாவசிய பொருட்களான காய், மளிகை பொருட்கள் மற்றும் பால் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

மேலும் கர்நாடக எல்லையை ஒட்டி அமைந்துள்ள கேரள மாநிலத்தில் ஒரு பகுதி தான் காசர்கோடு. இங்கு வசிக்கும் மக்கள் பொதுவாக தங்களது தேவைகளுக்கும், மருத்துவ வசதிகளுக்கும் கர்நாடக மாநிலம் மங்களூருக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில், கர்நாடக எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் நோயாளிகள் சிகிச்சைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த 27ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக அப்துல் ரகுமான் என்ற நோயாளியை ஆம்புலன்சில் மங்களூருக்கு கொண்டு செல்ல முயன்றனர். சோதனைச்சாவடியில் வாகனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மீண்டும் வீட்டிற்கே கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை கிடைக்கப்பெறாததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேபோல, 70 வயது மூதாட்டியும் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா முதல்வர் பினராய் விஜயன் பல முறை எடியூரப்பாவை தொடர்பு கொண்டும் கண்டு கொள்ளவில்லை. தலைமைச் செயலர்கள் அளவில் பேசியும் எந்த பயனும் அளிக்கவில்லை. இந்த நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கும், மருத்துவ சேவைகளுக்கும் காசர்கோடு பகுதியில் உள்ள கர்நாடக எல்லையை திறந்துவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உன்னிதன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். விரைவில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |