நாடு (இந்தியா) முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாநிலம் விட்டு மாநிலம் திரும்ப நினைத்த தொழிலாளர்களின் பயணம், காவல் துறையினரின் நடவடிக்கையால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் இருந்து ராஜஸ்தானுக்கு 2 கண்டெய்னர் லாரிகளில் சென்ற 300 பேரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மற்ற மாநிலங்களில் தங்கியிருந்த மக்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். பிற மாநிலங்களில் தனிமையில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்தை நினைத்து, அங்கு எப்படி இருக்கிறது? ஏதாவது நடந்திருக்குமா? என்ற அச்ச உணர்விலேயே இருந்து வருகின்றனர்.
பலரும் எப்படியாவது, ஏதாவது ஒரு வழியிலாவது தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அது அவ்வளவு எளிதில் சாத்தியமானது கிடையாது. ஆம், வீட்டை விட்டு வெளியே பக்கத்து தெருவிற்கு கூட போக முடியவில்லை. அப்படி இருக்கும் நிலையில் எப்படி மாநிலம் விட்டு மாநிலம் செல்ல முடியும்.
இந்நிலையில், இந்தியாவே ஊரடங்கில் அடங்கிப்போய் இருக்கும் இந்தச் சூழலில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தெலங்கானாவில் இருந்து ராஜஸ்தானில் உள்ள தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முயன்றுள்ளனர்.
இவர்கள் 2 கண்டெய்னர் லாரிகள் மூலம் தெலங்கானாவில் இருந்து புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கண்டெய்னர் லாரிகள் மகாராஷ்டிரா-தெலங்கானா மாநில எல்லையில் யவத்மால் (Yavatmal) பகுதியில் வந்துகொண்டிருந்தன.
அப்போது, கொரோனா தடுப்புக்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல் துறையினர் கண்டெய்னர்களைக் கண்டதும், அதனை மடக்கி சோதனையிட்டபோது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்ன இருக்காதா என்ன.. நாடே கொரோனா தொற்றுக்கு அஞ்சி வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நிலையில், 300 தொழிலாளர்களின் கண்டெய்னர் பயணம் தேவையா? என்ற கேள்வி எழுப்பினர். ஆனால் அவர்கள் தங்கள் தரப்பு விருப்பம் நிறைவேற வேண்டும் என்று கூறினர். ஆனால், அவர்களின் ஆசைக்குச் சட்டம் வளைந்துகொடுக்குமா? அது அதன் கடமையைத்தானே செய்யும்.
இது குறித்து அதில் பயணித்தவர்கள், “பேருந்து, ரயில் போக்குவரத்து உட்பட ஏதும் இல்லாததால் கண்டெய்னர் லாரியில் ஒளிந்துகொண்டு எங்களின் சொந்த மாநிலத்துக்குச் (ராஜஸ்தான்) செல்ல நினைத்தோம்” என்று வருத்தம் தெரிவித்தனர். இதையடுத்து கண்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் இருவரையும் போலீசார் கைதுசெய்தனர்.