உருகி உருகி காதலித்த இவர்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை.? அதற்கான காரணம் என்ன.? வாருங்கள் இந்த பதிவில் பார்ப்போம்.!
கிருஷ்ணர் என்ற பெயரோடு சேர்த்து ஒரு பெயர் சொல்லப்படுகிறது என்றால் அது ராதையின் பெயர்மட்டும் தான். காதலுக்கு அடையாளமாக இன்று வரை இருவரும் சொல்லப்பட்டாலும், கிருஷ்ணர் ராதையை இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
கிருஷ்ணர் ராதையின் மேல் கொண்ட காதலை தன்னுள் உணர்ந்து அனுபவிக்கிறார். அவருக்குள் இனம்புரியாத ஒரு இன்பம் தோன்றுகின்றது. ஒருநாள் அவர் ராதை மேல் கொண்ட காதல் பற்றி தன் தாயிடம் பேசத் துவங்குகிறார். அன்னையே நான் ராதையை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்கிறார்.
உடனே கிருஷ்ணரின் தாயாரான யசோதா கூறுகிறார்.. கண்ணா ராதை உனக்கு தகுந்தவள் கிடையாது ஏனென்றால் அவள் உன்னை விட ஐந்து வயது பெரியவள். அதோடு அவள் வேறு ஒருவருக்கு நிச்சயக்கப்பட்ட பெண் என்றால் யசோதா. உடனே கிருஷ்ணர் கூறுகிறார்..! அன்னையே இது பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது அவள் என்னை பார்த்த மாத்திரத்தில் இருந்து என்னை அவள் காதலிக்கிறாள், என்னோடு அவள் வாழ விரும்புகிறாள், அதனால் அவளை நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்கிறார்.
கிருஷ்ணர் தாயும், மகனும் இதுபற்றி சில மணி நேரம் தொடர்ந்து பேசுகின்றனர். இறுதியாக கிருஷ்ணரை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அந்தத்தாய் தன் கணவரான நந்தகோபரிடம் இதுபற்றி தெரிவிக்கிறார். சற்று நேரம் யோசித்த நந்தகோபர், கிருஷ்ணரை தன் குருவிடம் அழைத்துச் செல்ல இதுதான் சரியான நேரம் என்று எண்ணுகிறார்.
உடனே அவர் கிருஷ்ணரை குருவின் ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு கிருஷ்ணனின் குருவான கங்கா சாரியார் மற்றும் தண்டிப்பணி ஆகிய இருவரும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் கிருஷ்ணருக்கு சில விஷயங்களை கூற துவங்குகிறார்கள். கண்ணா உன் வாழ்வின் நோக்கம் வேறு, தர்மத்தை மீட்பதற்காக பிறந்தவன் என்கின்றனர்.
உடனே கிருஷ்ணர் கூறுகிறார்..! நான் தர்மத்தை எல்லாம் மீட்க விரும்பவில்லை, நான் இங்குள்ள மாடுகள், மனிதர்கள், மரங்கள் இவற்றையே நேசிக்கிறேன். நான் எங்கேயும் சென்று எதையும் ஏற்க விரும்பவில்லை. எனக்கு இங்கு வாழ பிடித்திருக்கிறது. அதனால் இங்கு தான் நான் வாழ விரும்புகிறேன் வேறு எதையும் செய்ய எனக்கு விருப்பமில்லை என்கிறார்.
இதற்குமேல் உண்மையை கூறாமல் இருக்க முடியாது.? கிருஷ்ணருடைய பிறப்பின் ரகசியத்தை அவரிடம் கூறுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று எண்ணுகிறார் கங்கா சாரியார். உடனே அவர் கிருஷ்ணரிடம் , கண்ணா நீ யசோதைக்கும் நந்தகோபர்க்கும் பிறந்த மகன் அல்ல. உன்னைப் பற்றிய முழு விவரத்தையும் நாரதர் என்னிடம் கூறியுள்ளார்.
நீ மறுத்தாலும், நீதான் தர்மத்தை காக்க பிறந்தவன். இந்த அகிலத்தில் வாழும் முனிவர்கள் எல்லாம் துதிப்பது உன்னைதான் என நாரத முனி கூறியது ஒரு போதும் பொய்யாகாது என்கிறார். இதைக் கேட்டவுடன் கிருஷ்ணர் ஒரு குழப்ப நிலைக்கு செல்கிறார். ஒரு பக்கம் இதுநாள் வரைக்கும் தன்னை பாசத்தோடும் நேசத்தோடு வளர்த்தவர்கள், தன்னுடைய உண்மையான தாய் தந்தையர் கிடையாது என்கின்றனர்.
மறுபக்கம் தன்னையே கடவுள் என்று கூறுகின்றனர், இதெல்லாம் உண்மைதானா.? என்ன நடக்கின்றது.? என்று சிந்தித்தவாறே கோவர்தன மலையின் மீது ஏற துவங்குகிறார் கிருஷ்ணன். மலையின் உச்சிக்கு சென்றவர் வானத்தை பார்த்துக்கொண்டு அப்படியே நிற்கிறார். சூரியதேவன் அஸ்தமனம் ஆகிறார், அந்த அஸ்தமனத்தை பார்த்தவாறு அப்படியே நிற்கிறார் கிருஷ்ணர்.
திடீரென்று அவருக்குள் ஒரு ஒருவிதமான சக்தி வந்ததை அவர் உணர்கிறார். பல மணி நேரமாக அவர் அங்கேயே நின்று தனக்குள்ளேயே அவர் பலவற்றை உணர்ந்து அனுபவிக்கிறார். அந்த மலையை விட்டு கீழே இறங்கி வரும் பொழுது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறார். விளையாட்டுத்தனமாக இருந்த அந்த மாடு மேய்க்கும் சிறுவனின் குணங்கள் மறைந்து, புதிய ஒரு தெய்வீக தன்மையோடு அவர் வெளிப்படுகிறார்.
அந்த மலையை விட்டு கீழே இறங்கி நடக்கும் பொழுது, அவரோடு சேர்ந்து விளையாடியவர்கள் அவருடைய நடனத்தையும், இசையையும் ரசித்தவர்கள் என அனைவரும் தங்களை அறியாமலேயே திடீரென அவரை வணங்க துவங்குகின்றனர். தான் இந்த இடத்தை விட்டு சென்று தன்னுடைய கடமையை ஆற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை கிருஷ்ணர் உணர்கிறார்.
கிருஷ்ணரின் இந்த தெய்வீக நிலையை கண்டு ராதை தனக்குள் பேரின்பம் கொள்கிறாள். ராதையை கண்ட கிருஷ்ணர் அவளை அன்போடு பார்த்து தன்னுடைய கையிலிருந்த புல்லாங்குழலை அவளிடம் கொடுத்து இந்தப் புல்லாங்குழல் உனக்கு மட்டும்தான் சொந்தம். எனக்கென்று இனி எந்த புல்லாங்குழலும் கிடையாது என்று கூறுகிறார்.
அதன் பிறகு கிருஷ்ணர் தன் வாழ்நாளில் புல்லாங்குழலை வாசிக்கவே இல்லை. ராதையும் கிருஷ்ணரும் வெவ்வேறு மனிதர்களை திருமணம் செய்து கொண்ட போதிலும் அவர்கள் மனதிற்குள் இருந்த அந்த தெய்வீக காதல் இறுதிவரை அவர்களுக்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது.