21 நாள் போரில் நாம் வெல்வோம் என்று வாரணாசி மக்களவை தொகுதி மக்களிடம் பிரதமர்மோடி உரையாற்றினார்.
பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நாட்டு மக்களிடையே 2 ஆவது முறையாக உரையாற்றினார். அப்போது அவர், அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும் என்றும், 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி தனது வாரணாசி மக்களவை தொகுதி மக்களிடம் இன்று மாலை 5 மணியளவில் காணொலி வாயிலாக உரையாற்றிய போது, கொரோனா வைரஸை நாம் சுற்றி வளைத்து தடுப்போம். மகாபாரதப் போர் 18 நாட்கள் நடந்தது, 21 நாட்கள் நடக்கும் கொரோனா பாதிப்புக்கு எதிரான போரில் நாம் வெல்வோம். 21 நாட்களுக்கு வீட்டில் இருந்து கொரோனாவை விரட்டுவோம். ஏழை, பணக்காரர் என்று கொரோனா பாரபட்சம் காட்டாது. யோகா உடற்பயிற்சி செய்தாலும் கொரோனா விடாது”என்றார்.
மேலும் மக்கள் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அதேநேரத்தில் வதந்திகளை நம்ப வேண்டாம். சில நேரங்களில் முக்கியமான விஷயங்களில் மக்கள் கவனம் செலுத்துவதில்லை. இந்தியாவிலும் அதேதான் நடக்கிறது. இக்கட்டான இந்த சூழலில் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்று கூறினார்.