பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்திய நிலையில் அடுத்த 21 நாட்களுக்கு எவையெல்லாம் செயல்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீயாக பரவி வருகிறது. இதுவரையில் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 2 ஆவது முறையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தினார்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அடுத்த 21 நாட்களுக்கு எவையெல்லாம் செயல்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ரேஷன், பால், காய்கறி, இறைச்சி, மருந்து, மளிகைக்கடைகள் ஆகியவை திறந்திருக்கும்.
அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் முழுமையாக கிடைக்கும். அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும். அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்படும். ஆகவே அச்சப்பட்டு பொருட்களை வாங்கிக்குவிக்க வேண்டாம் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் உணவுப்பொருட்கள், மருத்துவப்பொருட்கள், மருந்துகள் ஆன்லைன் மூலம் பெறலாம். உணவு, மருந்துகளை டோர் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் செயல்பட அனுமதியளிக்கப்படும். வங்கிகள் ஏடிஎம்கள், காப்பீடு நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும். பெட்ரோல், கேஸ் ஏஜென்சிகள் செயல்படவும், பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்திற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருக்கும் என்றும், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல, பிப்.15க்குபின் இந்தியா திரும்பியவர்கள் சுகாதாரத்துறை அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தலை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.