இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் தான் ‘தல’ என்று அழைக்கப்படும் எம்.எஸ் தோனி. இவர் கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடரில் ஆடினார். ஆனால், அதன் பின் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடமலேயே இருந்து வருகிறார். இந்த இடைவெளியில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் (பிசிசிஐ) ரிஷப் பண்ட் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரை தயார் படுத்தி வருகின்றது. இந்தாண்டு (2020) ஐபிஎல் சீசனில் தோனி சிறப்பாக ஆடினால் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
ஆனால், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐ.பி.எல் தொடர் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 க்குள் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டால் ஐபிஎல் நடக்கும். ஆனால் தற்போது சூழ்நிலையை பார்த்தால் வாய்ப்பில்லை என்று தான் தெரிகிறது. இதனால் ஐபிஎல் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. இல்லையேல் நீ்ண்ட நாட்கள் தள்ளிப் போகலாம். இதனால் தோனி இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்று தான் சொல்லப்படுகிறது.
இந்தநிலையில் மற்ற வீரர்களை போல மிகப்பெரிய அறிவிப்போடு எம்.எஸ் தோனி ஓய்வு பெறாமல் அமைதியாக வெளியேறுவார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘டி20 உலக கோப்பையில் எம். எஸ் தோனி விளையாடுவதை பார்க்க நான் விரும்பினேன். தற்போதைய நிலையில் அது நடக்க வாய்ப்பே இல்லை. இந்திய அணி அவரை விட்டு நகரத் தொடங்கி விட்டது. எம்.எஸ் தோனி மற்றவர்களை போல மிகப்பெரிய அளவில் ஓய்வை அறிவிக்கமாட்டார். அவர் சத்தமின்றி அமைதியான முறையில் ஓய்வு பெறுவார் என்று கருதுகிறேன்’’என்று தெரிவித்தார்.