கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதன் கொடூர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினம்தோறும் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநில அரசாங்கங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை , தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக இன்றுசுய ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. முன்னதாகவே தமிழக அரசாங்கம் பல்வேறு வகையில் சிறப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.
தினம் தினம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு நடத்திகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததால் இந்த தொற்று பெருமளவில் தமிழகத்தில் கட்டுக்குள் இருந்தது.கொரோனா தடுப்பு நடவடிக்கையை தமிழகம் சிறப்பாக செய்து வருகின்றது என்று பிரதமரால் பாராட்டப்பட்டது.
இதுவரை 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டாலும், அந்த ஆறு பேரும் வெளியிலிருந்து வந்தவர்கள் என்பதால் மக்கள் சற்று நிம்மதியாக இருந்து வந்தனர். இந்நிலையில் கன்னியாகுமரி நகர்க்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் நேற்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
59 வயதான அந்த பெண்ணின் சளி , ரத்த மாதிரிகள் நெல்லையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவில் அந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதயநோய் , நுரையீரல் தொற்று போன்றவற்றால் அந்த பெண் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.