கொரோனா தடுப்பு முயற்சியின் ஒரு பகுதியாக நாளை சுய ஊரடங்கு உத்தரவை பின்பற்றுமாறு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். நாளை காலை 7 மணி முதல் 9 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை எவையெல்லாம் இயங்கும்? இயங்காது? என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
இயங்காதவைகள் :
- தமிழகம் முழுவதும் நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு, தனியார் பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரயில்கள், பயணிகள் ரயில்கள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தெற்கு ரயில்வேயில் ஆறு மண்டலங்களிலும் சேர்த்து 193 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சில உள்ளூர் விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
- கால் டேக்ஸி, ஆட்டோக்கள், லாரிகள், தண்ணீர் லாரிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை கடற்கரை – வேளச்சேரிக்கு நாளை பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையில் மின்சார ரயில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே இயங்கும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
- மளிகை கடைகள், காய்கறி கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் உள்ள உணவகங்கள் அனைத்தும் மூடப்படும் என அறிவித்துள்ளது.
- இன்று பிற்பகல் 3 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை கடற்கரைகளுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர், பாலவாக்கம் கடற்கரைகளுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி இல்லை.
- வாரச்சந்தைகள் அனைத்தும் மூடப்படும்.
- தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாஸ்க் மதுபானக் கடைகளும் மூடப்படும்.
- காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நட்சத்திர விடுதிகள் அனைத்தும் 31ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளனர்.
இயங்குபவைகள் :
- சுய ஊரடங்கின் போது மருத்துவமனைகள், மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தனியார் பால் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் பால் விநியோகம் நிறுத்துவதாக அறிவித்துள்ள நிலையில் பால் விநியோகம் வழக்கம் போல் நடைபெறும் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும்.
- குறைந்த ஊழியர்களுடன் அனைத்து பெட்ரோல் பங்குகளும் இயக்கப்படும் என அறிவித்துள்ளனர்.