திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கார் ஓன்று சிமெண்ட் லாரி மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலத்தில் உள்ள பாராமெடிக்கல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் விடுமுறையையொட்டி உதகைக்கு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அவிநாசி அடுத்த பழங்கரை என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த சிமெண்ட் லாரியின் மீது அசுர வேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 5 கல்லூரி மாணவர்கள் மற்றும் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 கல்லுரி மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் கார் ஓட்டுநர் கண் அசந்து தூங்கியதே விபத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.