செய்யாறில் 9 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய லாரி டிரைவரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
செய்யாறு பகுதியை சேர்ந்த 14 வயதான சிறுமி அதே பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். அதே பகுதியை சேர்ந்த 59 வயதான கஜேந்திரன் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறான். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அந்த பள்ளி மாணவி இயற்கை உபாதையை கழிக்க தனியாக காட்டுப்பகுதிக்குச்சென்றுள்ளார்.
அப்போது டிரைவர் கஜேந்திரன் வலுக்கட்டாயமாக மாணவியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டான். இதையடுத்து இங்கு நடந்ததை வீட்டிலோ, வெளியிலோ யாரிடமாவது கூறினால் கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளான்.
இதனால் அந்த மாணவி பயந்து போய் யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவி வீட்டில் மிகவும் சோர்வாக இருந்ததை பார்த்த அவரது தாய் மகளிடம் கேட்டபோது நடந்தவற்றை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் மாணவியை உடனடியாக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்ததில் மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். புகாரின்படி டிரைவர் ஜேந்திரனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.