கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டது. சுற்று, சுற்றி அடிக்கும் வெயிலில் நம் உடலை சீராக வைத்துக் கொள்வதற்கு ஒவ்வொருவரும் அவர்களின் உணவு முறையில் கட்டுப்பாட்டை கொண்டுவர வேண்டியது ரொம்ப அவசியம்.
பொதுவாக வெயில் காலங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதால் உடலில் உள்ள நீர் அனைத்தும் வியர்வை மூலமாக அதிகமாக வெளியேறும். உடம்பில் நீர் குறைந்தால் உடல் சோர்வு ஏற்படும். அதுமட்டுமில்லை மயக்கம் வரும், செரிமானம் ஆகாது, பல தோல் வியாதிகள் வரும். இதை தடுப்பதற்கு கோடை காலத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் வெப்பத்திலிருந்து குளுமையாக்கும்.
நீங்கள் எங்கு வெளியே சென்றாலும் குடிப்பதற்கு சுத்தமான தண்ணீரை வீட்டிலிருந்து எடுத்துச் செல்வது ரொம்ப முக்கியம். கோடை காலத்தில் நீங்கள் தண்ணீர் எவ்வளவுதான் குடிக்கிறார்களோ அந்த அளவுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும். கோடை காலத்தில் நிறைய பேர் பிரிட்ஜில் இருந்து தண்ணீர் எடுத்து குடிப்பார்கள். இது உடம்புக்கு கேடு கோடை காலத்தில் அதிகமான நீர்ச்சத்து உடம்பிலிருந்து வெளியேற்றும்.
உடலில் இருக்கக்கூடிய எலக்ட்ரோலைட், சோடியம், பொட்டாசியம் இதன் அளவு குறைய ஆரம்பித்துவிடும். இதை தவிர்ப்பதற்கு இளநீர் அதிகமாக குடிக்க வேண்டும். விட்டமின் பி, சி சோடியம், பொட்டாசியம், கால்சியம் மெக்னீசியம், இரும்பு, காப்பர், பாஸ்பரஸ், கந்தகம் இதே போன்ற தாது உப்புக்கள் இருக்கிறது. இது நம் உடலை பாதுகாப்பாக வைப்பதற்கு உதவும்.
இதேபோன்று எலுமிச்சை ஜூஸ் குடித்தால், அதில் இருக்கக்கூடிய விட்டமின் “சி” உடம்புக்கு ரொம்ப நல்லது. இது மட்டுமில்லாமல் புதினா, துளசி, ஜெர்ரி பழம் இது போன்றும் ஜூஸ் செய்து குடிக்கலாம். இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். அதனால் வெயில் காலங்களில் ஏற்படும் சிறுநீர் பாதை தொற்றுகளிருந்து நம்மை பாதுகாக்கும். கோடை காலத்தில் அதிகமாக குடிக்க வேண்டியது நீர்மோர். சுலபமாக தயாரித்துக் கொள்ளலாம்.
இந்த நீர் மோரில் புரோபயாடிக் அதிகமாக இருப்பதால், உடலின் வெப்பநிலையை சமமாக வைத்துக்கொள்வதற்கு இது உதவும். இதுபோன்று வெயில் காலங்களில் காபி, டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். இது உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். காபிக்கு பதிலாக கிரீன் டீ குடிக்கலாம். கிரீன் டீயில் எதிர்ப்பு சக்தி அதிகம். உடல் நிலை சீராக வைத்துக் கொள்வதற்கு உதவும்.
முக்கியமாக குளிர்பானம், சோடா வெயில் காலம் மட்டுமல்ல, எந்த காலத்திலும் குடிக்கக்கூடாது. அதற்கு பதிலாக பழச்சாறு குடிப்பது ரொம்ப நல்லது. வெயில் காலம் என்பதால் நாம் சாப்பிடும் உணவுகள் கூட பெரியதாக மாற்றவேண்டிய அவசியமில்லை. அரிசி சப்பாத்தி இது வழக்கம் போல் உண்டு கொள்ளலாம். நாம் சாப்பிடும் உணவுகளில் மோர் தயிர், அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. அதே போன்று நார்ச் சத்து அதிகமாக இருக்கும் பழங்கள், காய்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தவிர்க்கவேண்டிய உணவுகள்:
இந்த ராகி உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். இதனால் இதை தவிர்க்க வேண்டும். இறைச்சி, முழு பருப்பு வகைகள், எண்ணெய் பலகாரம் இவை அனைத்தையும் கோடை காலத்தில் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இவை அஜீரணத்தை ஏற்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்று வலி உண்டாக்கும். முடிந்தவரைக்கும் மாமிசங்கள் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் அது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
நீங்கள் வேலையாக வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வரும்பொழுது அரை மணி நேரம் கழித்து, ஒரு குளியல் குளித்து விட்டு லேசான ஆடைகளை அணிந்து கொள்வது ரொம்ப நல்லது. இது கோடையை சமாளிப்பதற்கு ரொம்ப உதவும். கோடை காலத்தில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் நிறைய தோல் வியாதிகள் வரும். காலையில் 11 மணியிலிருந்து 3 மணிவரைக்கும் வெப்பம் அதிகமாக இருப்பதால் இந்த நேரங்களில் வெளியில் போகாமல் இருப்பது ரொம்ப நல்லது.
இதையும் மீறி வெளியில் போக வேண்டும் என்றால் சன் ஸ்கிரீன் லோசனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது தோல் வியாதிகளில் இருந்து உங்களை காக்கும். கோடைகாலத்தை சமாளிக்க இயற்கை கொடுத்த பரிசு வெள்ளரிக்காய். இது தாகத்தை தனிப்பது மட்டுமல்லாமல் பல நோய்களை குணமாக்கும். இதில் 90% நீர்ச்சத்து தான் இருக்கிறது. இதை பச்சையாக சாப்பிட்டாலும் முழுமையான பலன் நமக்கு கிடைக்கும்.
இதில் சோடியம் அதிக அளவில் இருக்கும். கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், குளோரைடு, இரும்பு சத்து, விட்டமின் பி, சி, ஏ ஆகியவையும் இருக்கும். நம் உடலில் வியர்வை மூலம் வெளியேறும் நீர் சத்தை இது ஈடு செய்யும். அதே போன்று அதிக நீர்ச்சத்துள்ள தர்பூசணி இதுவும் நம் உடலை குளிர்ச்சியாக்குவதற்கு உதவும். இதேபோன்று வெயில் காலங்களில் சாதாரண தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக ஒரு மண் பானை எடுத்து அதில் தண்ணீரை ஊற்றி வெற்றிவேர் போட்டு அந்த வேர் ஊறுகின்ற தண்ணீரை குடித்தால் நம் உடம்பில் உள்ள சூடு அனைத்தும் குறையும்.
வேர்க்குரு அதனால் வரும் கட்டி இவையெல்லாம் குணமாகும். இதேபோன்ற வெயில் காலங்களில் ஆரஞ்சு, சாத்துக்குடி இதே போன்ற பழங்கள் குறைந்த விலையில் கிடைக்கும். இதை எல்லாம் வாங்கி ஜூஸ் போட்டு குடிக்கலாம். தாகத்தை தணிக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும். இதேபோன்று பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். மூன்று வேளையும் வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.
கார உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் கோடை காலங்களில் இதை தவிர்ப்பது தான் நல்லது. அதையும் மீறி நீங்கள் கோடை காலத்தில் கார உணவுகளை அதிகமாக சாப்பிட்டால், ஒரு மாதுளை பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால் போதும். அதிகமாக தண்ணீர் தாகம் எடுப்பதை தவிர்க்கும்.
கோடை காலத்தில் இயற்கையோடு சேர்ந்து வாழ்வதற்கு நம் வீட்டில் ஒரு மரமாவது நட வேண்டியது ரொம்ப அவசியம். இது கோடை வெப்பத்தை தணிக்கும்.