Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING : ஆசிரியர்கள், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் – வழிமுறைகளை வெளியிட்டது யுஜிசி..!!

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டது யுஜிசி. மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகளை தினசரி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக உயர் கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது பல்கலைக்கழக மானிய குழு. கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான 29 அம்சங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகளை தினசரி வழங்க வேண்டும் எனவும், கல்லூரியில் சேரும்போதே மாணவிகளுக்கு அவசர காலங்களில் தொடர்பு கொள்வதற்கான தொடர்பு எண்கள் கொண்ட கையேடுகளையும் வழங்க வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது.

புதிய கல்வி கொள்கை அடிப்படையில் தொழில் முனைவோர்களாக பெண்களை மாற்றுவதற்கான பயிற்சியையும் அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனம் மற்றும் விடுதிகளில் சுற்றிலும் அன்னியர்கள் நுழையாதவாறு மதில் சுவர் மிக உயர்ந்த அளவில் அமைக்கப்பட்டு கண்காணிப்பையும் பலப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெண் காவலர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் எனவும், வகுப்பறை, விடுதிகள், பூங்காக்கள் மற்றும் வாகனம் நிறுத்தும் இடங்களில் இரவு நேரங்களில் இருட்டு இல்லாதவாறு மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும் சிசிடிவி கேமரா காட்சி பொருத்த வேண்டும். 24 மணி நேரமும் சுத்தமான சுகாதாரமான தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

மாணவிகளுக்கு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு ஆலோசனைகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பாலில் தொந்தரவு குறித்து விசாரணை செய்ய குழு கட்டாயமாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 29 அம்சங்களை பல்கலைக்கழகத்தின் மானிய குழு வெளியிட்டுள்ளது. குறிப்பாக பல்கலைக்கழக மானிய குழுவின் சார்பில் நடத்தக்கூடிய கணக்கெடுப்பில் மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |