உலக அளவில் பல நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்றவைகளுக்கு தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம் ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதோடு அடுத்த 6 மாதத்திற்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை முன்கூட்டியே வாங்க வேண்டும்.
கொரோனா வார்டுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு, கொரோனா தடுப்பூசி மையங்கள் முழு நேரமும் செயல்படுத்த வேண்டும். அவசர கால சிகிச்சைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் இருப்பதோடு, என்95 முகக்கவசம், பிபிஇ கிட், அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பை மதிப்பீடு செய்ய வேண்டும். அதோடு வென்டிலேட்டர், சிபிஏபி கருவி, ஆக்சிஜன் செலுத்தும் கருவி உள்ளிட்டவைகள் தயார் நிலையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்வதோடு, திரவநிலை ஆக்சிஜன் தேவைக்கேற்ப தயார் நிலையில் இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் ஆக்சிஜனை பிரித்து அளிக்கக்கூடிய கருவிகள் செயல்படுகிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.