இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தான் விரும்புவார்கள். ஏனெனில் மற்ற போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்தில் கட்டணம் மிகக்குறைவு. அதன் பிறகு சிலர் வேலை மற்றும் சொந்த காரணங்களுக்காக சில சமயங்களில் வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். அந்த சமயத்தில் தங்களுடைய பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் போன்றவற்றையும் உடன் எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஒருவேளை உங்களுடைய இருசக்கர வாகனத்தை நீங்கள் உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் ரயில் சேவையை அணுகலாம். அதாவது ரயில் பார்சல் சேவை மூலம் இருசக்கர வாகனத்தை நீங்கள் அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்பி வைக்கலாம். இதற்கான கட்டணமும் மிகக்குறைவு தான்.
இந்நிலையில் ரயில்வே நிலையத்தில் உள்ள பார்சல் கவுண்டரை அணுகினால் இருசக்கர வாகனத்தை பார்சல் அனுப்புவது தொடர்பான அனைத்து விவரங்களும் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு தகவல் கிடைத்ததும் தேவையான ஆவணங்களை கொடுத்து பைக்கை ரயிலில் பார்சல் செய்து அனுப்பி வைத்து விடலாம். நீங்கள் பைக் பார்சலுக்காக செல்லும்போது அசல் மற்றும் புகைப்பட நகல் இரண்டையும் கையில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் சரி பார்ப்பின் போது அசல் ஆவணங்கள் தேவைப்படலாம். பைக் பார்சல் செய்த பிறகு கடைசியாக டேங்க் சரிபார்க்கப்படும். பைக்கை பார்சலில் அனுப்பும்போது பெட்ரோல் இருக்கக் கூடாது. ஒருவேளை டேங்கில் பெட்ரோல் இருந்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
பைக்கை பார்சலில் அனுப்புவதற்கு ஒரு நாளைக்கு முன்னதாகவே நீங்கள் முன்பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு இருசக்கர வாகனத்தின் பதிவு சான்றிதழ், காப்பீட்டுச் சான்றிதழ், ஆதார், ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை பைக் பார்சல் செய்யும் போது உடன் கொண்டு செல்ல வேண்டும். இதனையடுத்து பைக்கை பார்சல் செய்யும்போது ஹெட் லைட் உடையாதவாறு கவனமாக பார்சல் செய்ய வேண்டும். ஆனால் ரயிலில் பைக் பார்சல் அனுப்பும்போது நீங்கள் உடன் செல்ல முடியாது. நீங்கள் கொடுக்கும் அட்ரஸுக்கு பைக் சென்றுவிடும்.
மேலும் எடை மற்றும் தூரத்திற்கு ஏற்ப பைக் பார்சல் சர்வீஸில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு தோராயமாக 1200 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இது தவிர பைக் பார்சல் செய்யும் போது கூடுதல் கட்டணமாக 200 முதல் 300 ரூபாய் வரை வசூலிக்கப் படுகிறது. மேலும் பைக் பார்சல் அனுப்பும்போது இருசக்கர வாகனத்தின் பதிவு உங்கள் பெயரில் இல்லாவிட்டால், உங்கள் ஐடியை வைத்து பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு ஆர்சி புக் மற்றும் காப்பீட்டு ஆவணங்கள் கட்டாயம். பார்சல் சேவையை அணுக காலை 10 மணி முதல் 5 மணி வரை ரயில்வே நிலையத்திற்கு செல்லலாம்.