சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தலைமை செயலகத்தில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரிடர் மேலாண்மை துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட பல துறைகளின் முக்கிய திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து தகவல் பலகை தரவுகளின் அடிப்படையில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். இதில் தலைமை செயலாளர் வெ. இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆலோசகர் p.w.c டேவிதார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
பின்னர் சான்றிதழ்களை ஒரு மாத காலத்திற்குள் தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும், அவற்றின் விவரங்களை பலகையில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கூறினார். மேலும் தஞ்சாவூர், கோயமுத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பட்டா மாறுதல் பணிகள் தாமதமாக நடைபெறுவதாகவும், வேலூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகப் பணிகளை விரைவு படுத்த வேண்டும், வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்.
மேலும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் செயல்பட்டு வரும் மழை நீர் வடிகால், பாதாள சாக்கடை திட்டம் போன்றவற்றையும், சாலை மேம்பாட்டு பணிகள், நகர்ப்புற மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார். பின்னர் போக்குவரத்து துறையில் போதுமான எண்ணிக்கையில் பேருந்து சேவை நிர்ணயிக்கப்பட அளவுக்கு குறையாமல் இருக்க வேண்டும். குறைவாக பேருந்து இயக்கப்பட்டால் அதற்கான காரணங்கள் கண்டறிந்து அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும், பேருந்து நிலையங்களில் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.