கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பாக பெங்களூர் தமிழ் சங்கத்தில் தமிழ் புத்தக திருவிழா நேற்று தொடங்கியுள்ளது. இந்த விழாவில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பெங்களூர் மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம் பிரசாந்த் மனோகர் பாபா, அணு ஆராய்ச்சி கழகத்தின் முதுநிலை விஞ்ஞானி தவமணி, சிவாஜி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரிஸ்வான் ஹர்ஷத், பெங்களூர் மாநகராட்சி முன்னாள் மேயர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ் புத்தக திருவிழா பற்றிய சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மயில்சாமி அண்ணாதுரை பேசியபோது, “புதிய முயற்சியாக, புதிய நம்பிக்கையாக இன்று ஆரம்பித்துள்ள முதல் தமிழ் புத்தகத் திருவிழா உண்மையில் நம்பிக்கையை தருகிறது. தமிழ் என்னுடைய அடையாளம், தமிழ் எனது முகம் என்று ராம்பிரசாத் மனோகர் உணர்ச்சி பூர்வமாக பேசியுள்ளார். என்னுடைய முகவரி தமிழகம் என்றாலும் நான் சுமார் 40 ஆண்டுகள் பெங்களூருவில் தான் இருக்கிறேன்.
நான் எழுதிய 7 புத்தகங்களும் பெங்களூரில் வைத்துதான் எழுதப்பட்டது. நமது தாய் மொழியை மறக்க கூடாது. வேர்களாக இருக்கும் மொழியை மறக்க கூடாது. அந்த தாய் மொழி தான் உயரத்தை தொட உதவி செய்துள்ளது. நான் முழுவதும் தமிழ் வழியில் படித்தவன் தான். நான் முழுக்க படித்தது என்னுடைய சொந்த ஊர் கோயம்புத்தூரில் தான். நிறைய பேர் என்னிடம் வந்து தமிழில் படித்து விண்வெளி துறையில் சாதித்தீர்களா? என கேட்டனர். அதற்கு தமிழில் படித்ததால் தான் நான் சாதித்தேன் எனக் கூறினேன்” என அவர் பேசியுள்ளார்.