தேனி மாவட்டம் குமுளி மலைச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் உட்பட 10 நபர்கள் சபரிமலை கோவிலுக்கு சென்று திரும்புகையில் அவர்கள் வந்த வாகனம் நேற்று இரவு (23ஆம் தேதி) உத்தமபாளையம் வட்டம் குமுளி மலைப்பாதையில் எதிர்பாராத விதமாக விழுந்து விபத்துக்குள்ளானது. இச்செய்தியை அறிந்தவுடன் தேனி மாவட்ட பொறுப்பு அமைச்சரான மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு இ. பெரியசாமி அவர்களை உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளானவர்களுக்கு உரிய உதவிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினேன்.
இந்த விபத்தில் திரு நாகராஜ் (வயது 50), திரு. முனியாண்டி என்ற சாக்கு கடை முனியாண்டி, திரு.சிவக்குமார் (வயது 41) திரு.வினோத் குமார் (வயது 43), திரு. கண்ணுச்சாமி (வயது 65), திரு தேவதாஸ் (வயது 55), திரு. கலைச்செல்வன் (வயது 35), மற்றும் திரு கோபாலகிருஷ்ணன் (வயது 48) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இவ்விபத்தில் காயமுற்று தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 2 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்த 2 நபர்களுக்கு தலா 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் குமுளி மலைச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/RnPk2tmt6V
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 24, 2022