உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஒருசில இடங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைத்து வருகிறது. அத்தகைய இடங்களில் மக்கள் தங்களது வீடுகளில் இருந்தபடி குடும்பத்தினரோடு எளிமையான முறையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அந்த அடிப்படையில் காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் உறைநிலைக்கு கீழ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது.
நடப்பு ஆண்டு பதிவானதிலேயே மிகக்குறைந்த அளவு வெப்பநிலை காஷ்மீரில் இப்போது காணப்படுகிறது. ஸ்ரீ நகரில் நேற்றிரவு வெப்பநிலை மைனஸ் 5.8டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியது. அதிகளவு குளிர் காரணமாக தண்ணீர் குழாய்களில் நீர் உறைந்து காணப்படுகிறது. இதேபோன்று காஷ்மீரிலுள்ள பராமுல்லா, பால்கம், குப்வாரா ஆகிய பகுதிகளிலும் உறைநிலைக்கு கீழ் வெப்பநிலையானது பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.